search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்ரீவைகுண்டம் தடுப்பணை"

    ஸ்ரீவைகுண்டம் அணையின் உயரத்தை அதிகரிப்பது தொடர்பாக உரிய ஆய்வு செய்யப்படும் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறியுள்ளார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். உதவி கலெக்டர் பிரசாந்த், உதவி கலெக்டர்(பயிற்சி) அனு, வேளாண்மை இணை இயக்குனர் புருஷோத்தமன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேசினர். தொடர்ந்து கலெக்டர் சந்தீப் நந்தூரி பதில் அளித்து பேசியதாவது:

    தூத்துக்குடி மாவட்டத்தில் இயல்பான அளவு மழை பெய்யவில்லை என்றாலும், போதுமான அளவு தண்ணீர் உள்ளது. கடந்த வாரம் தாமிரபரணி ஆற்றில் 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் சென்றது. அப்போது 4 கால்வாய்கள் மூலம் குளங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது. இதில் 41 குளங்களுக்கு தண்ணீர் வந்து உள்ளது. 12 குளங்களுக்கு தொடர்ந்து தண்ணீர் சென்று கொண்டு இருக்கிறது. சடையநேரி கால்வாயிலும் தண்ணீர் வழங்கப்பட்டு உள்ளது. குளங்கள் அனைத்தும் தூர்வாரப்பட்டு வருகிறது. தாமிரபரணி ஆற்றில் உள்ள கால்வாய் கொள்ளளவை அதிகரிப்பது, ஸ்ரீவைகுண்டம் அணையின் உயரத்தை அதிகரிப்பது தொடர்பாக உரிய ஆய்வு செய்யப்படும்.

    சடையநேரி கால்வாய் தாமிரபரணி ஆற்றில் இருந்து செல்லும் பிரதான கால்வாய் கிடையாது. உபரிநீர் கால்வாய் ஆகும். 40 கிலோ மீட்டர் நீளம் உள்ள இந்த சடையநேரி கால்வாயில் 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. தற்போது 6 குளங்கள் 50 சதவீதம் நிரம்பி உள்ளது. இந்த கால்வாயில் படுக்கப்பத்து, புத்தன்தருவை பகுதியில் சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்துக்கு விவசாயிகளே தூர்வாரி உள்ளனர். மீதம் உள்ள கால்வாய் விரைவில் தூர்வாரப்படும். முக்காணி தடுப்பணை 70 சதவீதம் பணிகள் முடிந்து உள்ளன. தாமிரபரணி ஆறு கடலில் கலக்கும் புன்னக்காயல் பகுதியில் ரூ.52 கோடி செலவில் ரெகுலேட்டர் தடுப்பணை அமைப்பதற்கான திட்டம் பரிசீலனையில் உள்ளது. தாமிரபரணி ஆற்றில் தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. நிரம்பாத குளங்களும் விரைவில் நிரம்பும். ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்த அமலைச் செடிகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உள்ளது. கால்வாய்களில் அடைத்து இருந்த அமலைச் செடிகள் அகற்றப்பட்டு உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக, வேளாண் பொறியியல் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த நோட்டீசை கலெக்டர் சந்தீப் நந்தூரி வெளியிட்டார்.

    ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையை தாண்டி வீணாக கடலுக்கு செல்லும் தாமிரபரணி தண்ணீரை சேமிக்க முடியாமல் தூர்ந்து போய் உள்ள பாசன குளங்களை தூர்வாரிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். #Thamirabaraniriver
    நெல்லை:

    நெல்லை மாவட்டம் பாபநாசம் மலையில் பூங்குளம் என்ற இடத்தில் உற்பத்தியாகும் தாமிரபரணி ஆறு தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் பகுதியில் கடலில் கலக்கின்றது. இரு மாவட்ட மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் தாமிரபரணி ஆற்றில் பல தடுப்பணைகள் உள்ளன. இதில் மருதூர் அணை மற்றும் கடைசி அணையான ஸ்ரீவைகுண்டம் அணை தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது.

    மருதூர் அணை சுமார் 800 ஆண்டுகள் பழமையானது. இந்த அணையில் கடந்த 2003-ம் ஆண்டுக்கு பிறகு அணை பராமரிப்பு பணிகள் ஏதும் நடைபெறவில்லை.

    இதைபோல், ஸ்ரீவைகுண்டம் அணை விவசாயிகளின் நலனுக்காக விவசாயிகளிடத்தில் பணம் வசூலித்து ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 140 ஆண்டுகளுக்கு அமைக்கப்பட்டதாகும். இவ்வணையிலும் பொதுப்பணித்துறையினரின் பராமரிப்பு பணிகள் நடைபெறாத நிலையில் கடந்த 2015ம் ஆண்டு தூர்வாரும் பணி தொடங்கியது.

    இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு தலைமையில் விவசாயிகளும் சமூக ஆர்வலர்களும் பல்வேறு போராட்டங்களை நடத்தியதுடன் வழக்கும் தொடர்ந்ததால் தூர்வாரும் பணிக்கு தடைவிதித்து 2017-ம் ஆண்டு பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

    மேலும், பொதுப் பணித்துறையினரின் முறையற்ற தண்ணீர் விநியோக முறைகளினால் விவசாயிகளின் நலன் கருதி அமைக்கப்பட்டுள்ள பாசன குளங்களுக்கு மழைக்காலத்தில் வரும் அதிகப்படியான வெள்ள நீரை சேமித்து வைக்க முடியாத அளவிற்கு பாசன குளங்கள் அனைத்தும் தூர்ந்து போய் உள்ளன.

    இதனால் தாமிரபரணியை ஆண்டுதோறும் ஸ்ரீவைகுண்டம் அணையை தாண்டி வீணாக கடலுக்கு செல்வதை தடுக்க முடியாதது மட்டும் இன்றி கோடைக்காலங்களில் வறட்சியான பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடும், விவசாயத்திற்கு தண்ணீர் தட்டுப்பாடும் தொடர்கிறது.

    முக்கியத்துவம் வாய்ந்த குளங்கள் அனைத்தும் பொதுப்பணித்துறையினரின் முறையான பராமரிப்பு ஏதும் இல்லாத நிலையில் தூர்ந்து போய் உள்ளதால் அதிகப்படியான தண்ணீரை சேமிக்க முடியாத நிலையில் உள்ளது.

    பாசன குளங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் வாய்க்கால்களும் தூர்ந்து போய் இருப்பதுடன் அமலைச் செடிகளின் ஆக்கிரமிப்பில் உள்ளதாலும் குளத்தின் மதகுகள் உடைந்த நிலையில் உள்ளதாலும் பாசன குளங்களுக்கு தண்ணீர் செல்வதில் தடை ஏற்பட்டு வருகிறது. இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் பாசன குளங்கள் அனைத்தையும் தூர்வாரிட வேண்டும் என கோரிக்கை வருகின்றனர்.

    இதுகுறித்து நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் வியனரசு கூறியதாவது:-

    விவசாயிகளின் நலன் கருதி அமைக்கப்பட்ட குளங்கள் அனைத்தையும் பாதுகாக்க பொதுப்பணித்துறையினர் தவறிவிட்டனர். கடந்த 20 ஆண்டு காலக்கட்டத்தில் மருதூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் அணை மற்றும் பாசன குளங்களில் நடைபெற்று முடிந்ததாக கணக்கு காட்டப்பட்ட பணிகளை மாவட்ட நிர்வகம் மறு ஆய்வு செய்தால் பொதுப்பணித்துறையினரின் பொறுப்பற்ற செயல்கள் அம்பலமாகிவிடும்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 53 பாசன குளங்களிலும் 10 டிஎம்சி தண்ணீரை தேக்க முடியும். ஆனால், சுமார் 35 ஆண்டுகளுக்கு பிறகு இவ்வாண்டு பெய்த தென்மேற்கு பருவமழையினால் கிடைத்த சுமார் 15 டிஎம்சி தண்ணீர் வீணாக ஸ்ரீவைகுண்டம் அணையை தாண்டி கடலுக்கு சென்றுள்ளது.

    மிகப்பெரிய குளமான தென்கரை குளம் உள்ளிட்ட அனைத்து குளங்களுமே முழு கொள்ளவை தேக்க முடியாத அவலநிலை தொடர்கிறது. பாசன வாய்க்கால் மற்றும் குளங்களை சீரமைத்து புதிய தடுப்பணைகளை கட்டிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகள் வாங்கிய கடனை அடைக்க வழியில்லாத நிலையில் பொதுப்பணித்துறையினரின் முறைகேடுகளும் அலட்சியப் போக்கும் தொடர்ந்தால் விவசாயிகளை திரட்டி தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நதிநீர் மேலாண்மை சங்க ஒருங்கிணைப்பாளர் கண்ணன் கூறுகையில், “மருதூர் அணை நிரம்பி ஸ்ரீவைகுண்டம் அணை வழியான தண்ணீர் வீணாக கடலுக்கு செல்லும் நிலையில் பாசன வாய்கால்களில் அமலைச் செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளதால் பெரிய குளமான தென்கரை குளத்திற்கு தண்ணீர் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே அமலைச் செடிகளை அகற்றி பாசன குளங்களில் அதிகப்படியான தண்ணீரை சேமிப்பதற்கான நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும்” என்றார்.



    மருதூர் மேலக்கால் வாய்கால் பாலங்களை ஆக்கிரமித்துள்ள அமலைச் செடிகளை அகற்ற பொதுப்பணித்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் விவசாயி சுரேஷ், படுக்கப்பத்து சமூக ஆர்வலர் சரவணன் உள்ளிட்ட தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து அமலைச் செடிகளை அகற்றும் பணியிலும் பழுடைந்த நிலையில் உள்ள மதகுகளை சீரமைக்கும் பணியிலும் ஈடுபட்டனர்.

    இப்பணிகளை ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் சந்திரன், மண்டல துணை வட்டாட்சியர் சுந்தரராகவன் உள்ளிட்ட வருவாய் துறையினர் பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கினர். #Thamirabaraniriver
    ×